X

சாராய ஆலை அதிபர்களை முதலமைச்சர்களாக தேர்வு செய்கிறோம் – சீமான் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்போரூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகன சுந்தரியை ஆதரித்து திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களையும் தமிழகத்திலேயே நிறுவி வாழ்வதற்கு வாய்ப்பற்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். 2½ ஆண்டுகளுக்கு மேல் அணு உலைக்கு எதிராக போராடி இன்னும் முடியவில்லை. போராட்டத்தின்போது 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி என்று மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கழிவுகளை கடலில் கொட்டுவதால் மிக பெரிய பாதிப்பை சந்திக்கிறோம்.

கல்பாக்கம் அணு உலை காரணமாக 14 கிராமங்களில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு இருந்தால்தான் ஒரு இடத்தில் வாழ முடியும், பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் எப்படி வாழ்வது?.

அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும் அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான். சீமானாகிய நான் சொல்லவில்லை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். காற்றாலைகள் கடற்கரை ஓரம் வைப்பதை விட்டுவிட்டு விளையும் நிலங்களில் அமைக்கின்றனர். நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் வேறு நாட்டில் இருந்து வாங்குகிறோம். உற்பத்தி செய்தால் கமிஷன் கிடைக்காது. தமிழக மக்கள் முதல்-அமைச்சர்களை தேர்வு செய்வதில்லை. சாராய ஆலை அதிபர்களை தேர்வு செய்கிறீர்கள். மத்திய அரசு எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.