Tamilசெய்திகள்

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – அமைச்சர் தகவல்

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. வருகிற 12-ந் தேதி வரை இந்த பணிகள் தமிழகம் முழுவதும் உள்ள 46 சேவை மையங்களில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கிய முதல் நாளான 7-ந் தேதி 23 ஆயிரத்து 4 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இவர்களில் 18 ஆயிரத்து 756 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று உள்ளனர். 4,248 பேர் அன்றைய தினம் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை.

இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தபோது பல இடங்களில் தனியார் மையங்களின் மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண்ணை தொடர்பு எண்ணாக வழங்கியிருப்பது தெரியவந்து உள்ளது. பல மாணவ-மாணவிகள் தனியார் பிரவுசிங் மையங்களுக்கு சென்று என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தபோது ஏற்பட்ட குளறுபடிகளால் இந்த சிரமம் நேர்ந்திருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக 1,957 பேர் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நேரிலும், 5 ஆயிரத்து 10 பேர் தொலைபேசி மூலமும், 22 ஆயிரத்து 321 பேர் மின்னஞ்சல் மூலமும் சந்தேகங்கள் கேட்டு அணுகி உள்ளனர். இதுவரை மொத்தம் 29 ஆயிரத்து 288 மாணவ-மாணவிகளுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது.

விடுபட்ட மற்றும் குளறுபடிகளால் தவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உரிய தீர்வை ஏற்படுத்தும் வகையில் உயர் கல்வித்துறை விரைவான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இயங்கும் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மாணவ-மாணவிகள் உரிய விவரங்களை அளித்தால் அவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவர்களை தவிர ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) பெற வழங்கப்பட்ட செல்போன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டிருந்தாலும், வேறு மாவட்ட மையங்களை தவறுதலாக தேர்வு செய்திருந்தாலும், சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்தில் வருகிற 12-ந் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *