X

சாத்தூரில் பட்டாசு குடோன் தீ பிடித்து வெடித்து சிதறியது!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வள்ளிமயில் அருகே கோவில்பட்டியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. நேற்று இரவு மின்கசிவு காரணமாக இங்கு திடீர் தீ ஏற்பட்டது.

இந்த குடோனில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருந்தன. அப்போது பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் மற்றும் கோவில்பட்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு புறம் தீயை அணைத்தாலும் மறுபுறம் பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்து சிதறியது.

15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் காரணமாக கோவில்பட்டி – சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.