சாத்தான்குளம் மரணத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஷிகர் தவான்
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக டுவிட்டரில் JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேகில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் தற்போது சமூக வலைதளத்தில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சமூக வலைதளவாசிகள், சினிமா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் இந்த ஹேஸ்டேகை பயன்படுத்தி ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டும் என டுவிட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவானும் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு உரிய நீதி வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’’ ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு
உரிய நீதி கிடைக்க நாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். கைகோர்ப்போம் JusticeForJeyarajAndFenix’’ என அவர் பதிவிட்டுள்ளார்.