சாத்தான்குளம் தந்தை மரண வழக்கில் கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவில் மதுரையில் இருந்து சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 6 அதிகாரிகள் 2 கார்களில் போலீஸ்காரர் முத்துராஜை மட்டும் அழைத்துக் கொண்டு சாத்தான்குளம் வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு 10.05 மணிக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் முத்துராஜை போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தந்தை-மகன் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடம், கண்காணிப்பு கேமரா இருந்த இடம் உள்ளிட்டவைகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் எடுத்து கூறினார். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.
இந்த வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, போலீஸ்காரர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் உடல்நிலை குணமடைந்ததால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரையும் பேரூரணி ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய ஜெயிலுக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
இந்த நிலையில் இன்று காவலர் முத்துராஜிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மற்றவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவலர் முத்துராஜ் ஒரு அறையிலும், மற்றவர்களை வேறொரு அறையில் வைத்து சிபிஐ விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.