X

சாத்தன்குளம் இரட்டை கொலை வழக்கில் 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. நேற்று மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த சம்பவத்தில் கைதான 9 போலீசாருக்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் பற்றிய பரபரப்பு தகவல்கள் இதில் இடம் பெற்று உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. கொலை வழக்குபதிவு செய்தது. இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அந்த சமயத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள்.

இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன்பேரில் சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணைக்கு உதவியாக சுமார் 400 பக்கங்களுடன் கூடிய கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றது தொடர்பாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

ஜெயராஜ்-பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் அழைத்துச் சென்றபோது பதிவான வீடியோ, அங்கிருந்து சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது அவர்களின் உடம்பில் இருந்த ரத்தக்கறை, ரத்தக்கறையுடன் இருந்த ஆடைகளை மாற்றியதற்கான வீடியோ பதிவுகள், தடயவியல் துறையினர் ஆய்வு குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிதாக 2 சாட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெண்ணிலா மற்றும் கோவில்பட்டி சிறையில் இருந்த கைதி ராஜாசிங் ஆகியோர் புதிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசான ரேவதி, பியூலா ஆகியோர் இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு வீடியோக்களையும் பார்த்து, எந்த சம்பவம் எப்போது நடந்தது என்று ஒவ்வொரு நகர்வையும் ஆதாரத்துடன் தெரிவித்து உள்ளனர். தடய அறிவியல் நிபுணர்களின் அறிக்கைகளும், இந்த வழக்கில் கைதானவர்கள் தான் குற்றவாளிகள் என்பதற்கான ஆதாரங்களாக உள்ளன என்பதாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தகவல்கள் இடம்பெற்று இருந்தன என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இந்த வழக்கின் முதலாவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சாட்சிகளிடம் தானாகவே குறுக்கு விசாரணை நடத்தினார். ஆனால் நேற்று தனக்காக ஒரு வக்கீலை நியமித்து, ஜாமீன் கேட்டு இதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்த 9 போலீசாருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் பிரேத பரிசோதனை சம்பந்தமான அறிக்கை அடங்கிய சி.டி. ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் இந்த வழக்கு வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.