சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு – வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை

வேளாண் வல்லுனர் குழு பேரவை சார்பில் தமிழக அரசுக்கு மேட்டூர் அணை பாசனப் பகுதி பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும் என்ற பரிந்துரை கையேட்டை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அக்குழுவை சேர்ந்த கலைவாணன் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் தற்போது 62 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி பாசனத்துக்காக 167.25 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட வேண்டும். எனவே மொத்தமாக 229 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு கிடைக்கும்.

மேட்டூர் அணை நீரை கொண்டு தமிழகத்தில் 12 மாவட்டங்களும், காரைக்கால் பகுதியும் பயனடைகின்றன. இப்பகுதியில் நிகழாண்டு குறுவை பட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கர், தாளடியில் 3.25 லட்சம் ஏக்கர், சம்பா பருவத்தில் 11 லட்சம் ஏக்கர், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் 80,000 ஏக்கர் என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து நெல் பருவத்திலும் நாற்று விட்டு நடவு செய்தால் இந்த நீர் போதாது. எனவே, நிலத்தடி நீர் மற்றும் மழை நீரையும் முழுவதுமாக பயன்படுத்த வேண்டும். குறுவை பருவத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய நிலத்தடி நீர் வசதி உள்ளது. மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்பாகவே இப்பரப்பில் நாற்றுவிட்டு, நடவு செய்தால் மேட்டூர் அணையில் இருந்து நீர் தேவை சுமார் 15 டி.எம்.சி. குறைகிறது.

இதேபோல, சம்பா பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு, புழுதி உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்வதால், நாற்றங்கால் தயாரிப்பு, நடவு வயல் சேறு கலக்குதல் போன்றவற்றுக்கு நீர் தேவைப்படாததால் 25 டி.எம்.சி.க்கு மேல் அணை நீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீரையும், மழையையும் பயன்படுத்தினால், அணை நீர் 229 டி.எம்.சி.யை கொண்டு சாகுபடி செய்ய முடியும்.

எனவே நிகழாண்டு பயிர் சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12-ந் தேதி திறப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இதற்கு வசதியாக நிலத்தடி நீர் வசதியுள்ள இடங்களில் எல்லாம் அணையை திறப்பதற்கு முன்பாகவே குறுவை நாற்றுவிட்டு, நடவு செய்து முடித்திட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது. விவசாயிகள் முன் ஏற்பாடு செய்து செயல்பட வசதியாக அணை திறக்கும் காலத்தை முன்கூட்டியே வருகிற 15-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்.

நிலத்தடி நீரை பயன்படுத்தும் குறுவை சாகுபடி விவசாயிகளின் வசதிக்காக மே, ஜூன் மாதங்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி அணைக்கு நீர் பெற்றுத் தர வேண்டும்.

பாசன வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை மராமத்து செய்து சீரமைக்க, போதிய நிதி அளித்து, அணை திறப்பதற்கு முன்பாகவே பணிகளை முடித்து, பாசன திறனை உயர்த்தி அணை நீர் தேவைகளை குறைக்க வேண்டும்.

மழை நீரை முழுமையாக பயன்படுத்த, சம்பா சாகுபடி பரப்பில் 50 சதவீதம், நேரடி நெல் விதைப்பை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குவதுடன், சிறப்பு முகாம் நடத்த வேளாண் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools