X

சவுக்கு சங்கர் வீடியோவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்ட ரெட் பிக்ஸ் நிறுவனம்

போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சென்னை பெருநகர காவல்துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX-க்கு உடன்பாடு இல்லை, அது RED PIX-ன் கருத்தும் இல்லை. இருப்பினும் அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்துருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.

கடந்த 30-04-2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது RED PIX ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர RED PIX ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக RED PIX ஊடகம் கருதுகிறது.

சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக RED PIX ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் PRIVATE செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.