சவால்கள் முக்கியமல்ல, சாதிப்பதே குறிக்கோள் – ரவிசாஸ்திரி
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து செல்கிறது. இதனையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-
முந்தைய உலக கோப்பையை விட தற்போதைய தொடர் சவாலனாதாக இருக்கும். 2015-ம் ஆண்டை விட தற்போது ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் அணி வலுவானதாக உள்ளது. சவாலை முறியடித்து சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும்.
இங்கிலாந்து ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கருதுகிறேன். இந்திய அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளோம்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் ஆட்டம் இந்த உலக கோப்பையில் பெரும் பங்கு வகிக்கும். அவரின் சிறு செயல்பாடுகள் கூட போட்டியின் ஆட்டத்தை மாற்ற கூடியது.
இந்திய அணி வீரர்கள் சவாலை கருத்தில் கொள்ளாமல் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.