X

சர்வம் தாளமயம்- திரைப்பட விமர்சனம்

ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜி.வி.பிரகாஷ்குமார், நெடுமுடி வேணு நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சர்வம் தாளமயம்’ எப்படி என்பதை பார்ப்போம்.

மிருதங்கம் செய்பவரின் மகன் மிருதங்கம் வாசிக்க ஆசைப்பட, அவருக்கு வரும் தடைகளும் அதை அவர் எப்படி முறியடித்து தனது ஆசையை நிறைவேற்றுகிறார் என்பது தான் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் கதைக்கரு.

மிருதங்கம் செய்யும் குமரவேலின் மகனான ஜி.வி.பிரகாஷ் குமார், தீவிர விஜய் ரசிகராக இருப்பதோடு, சக இளைஞர்களை போல கல்லூரி படிப்பு, காதல், ஊர் சுற்றுவது என்று சாதாரணமாக இருக்க, திடீரென்று மிருதங்க வித்வான் நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். அதற்காக அவரிடம் சிஷ்யராக சேரும் முயற்சியில் ஈடுபட, அவருக்கு பல எதிர்ப்புகள் வருகிறது. அதனை தகர்த்து அவரிடம் சிஷ்யராக சேர்ந்தாலும், அவரது முன்னேற்றத்தை பிடிக்காத சிலர் அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்ய, அதில் சிக்கி சின்னாபின்னமாகும் ஜி.வி.பிரகாஷின் கனவு நினைவானதா இல்லையா, என்பது தான் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் கதை.

குறிப்பிட்ட இசை, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே என்ற மாயையை உடைத்து, இசை என்பது அனைவருக்கும் சொந்தமானது, ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும், எத்தகைய இசையையும் கற்கலாம், அதில் சாதிக்கலாம், என்பதை சொல்லும் இப்படம் எந்த சமூகத்தினரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசாமல் நாசுக்காக சொல்வதோடு, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியும் சொல்கிறது.

பீட்டர் ஜான்சன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும், சில காட்சிகளில் ஒட்டாமல் போகிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற வயதுடையவராக இருந்தாலும், சில இடங்களில் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்களை கொடுப்பது படம் பார்ப்பவர்களை சலிப்படைய செய்கிறது.

படத்தின் மற்றொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு நெடுமுடி வேணுவின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. வேம்பு ஐயர் என்ற கதாபாத்திரத்தில் மிருதங்க கலைஞராக நடித்திருக்கும் நெடுமுடி வேணு, நடிப்பால் மட்டும் இன்றி பார்வை, பாடி லேங்குவேஜ் என்று அனைத்திலும் தனது கதாபாத்திரத்தின் கம்பீரத்தை வெளிக்காட்டி ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் குமரவேல், நெடுமுடி வேணுவின் உதவியாளராக நடித்திருக்கும் வினித் ஆகியோரது வேடம் இயல்பாக அமைந்திருந்தாலும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவே நடித்திருக்கும் டிடி-யின் வேடம் செயற்கைத்தனமாக இருக்கிறது. இருந்தாலும், திரைக்கதையின் வலுவால் அந்த குறையும் கண்ணுக்கு தெரியாமல் போய்விடுறது.

கர்நாடக இசை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும், இவர்களுக்கு மட்டும் தான், என்பதற்கு தனது திரைக்கதை மூலமாக பலமான எதிர்ப்பு தெரிவித்திருக்கும் இயக்குநர் ராஜீவ் மேனன், திரைக்கதையை இயல்பாக அமைத்திருந்தாலும், டிவி-யில் இடம் பெறும் இசை சம்மந்தமான போட்டி நிகழ்ச்சி போன்றவற்றில் செயற்கை தனத்தை அதிகமாக காட்டியிருப்பதோடு, அவை படத்தின் நீளத்தையும் அதிகரித்து விடுகிறது. இருந்தாலும், இசை என்பது லாக்கரில் பூட்டி வைக்க வேண்டிய பொருள் அல்ல, ஒருவரிடம் இருந்து பலரிடம் பறவக்கூடிய கலை என்பதை விளக்குவதற்காக டிவி – நிகழ்ச்சிகளையும், அதன் மூலம் வெளிவரும் இளம் கலைஞர்கள் பற்றியும் சொல்வதால் அதில் இருக்கும் குறையும் இறுதியில் நிறைவானதாகிவிடுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. சமீபகாலமாக ரஹ்மானின் இசையா இப்படி இருக்கிறது, என்று நொந்துப்போகும் ரசிகர்களுக்கு டானிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் அளவுக்கு தனது பின்னணி இசையையும், பாடல்களையும் ரஹ்மான் கொடுத்திருக்கிறார்.

ரவி யாதவின் ஒளிப்பதிவில் மிருதங்கம் வாசிப்பவர்களின் முக பாவனையுடன் அவர்களது விரல் பாவனைகளையும் ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், கர்நாடக இசையை யார் வேண்டுமானாலும் கற்கலாம் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இப்படம், கர்நாடக இசை பிரியர்களுக்கும்ம், அந்த இசை பற்றி தெரியாதவர்களுக்கும் பிடிக்கும் படமாக உள்ளது.

-ஜெ.சுகுமார்