X

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்களை வீழ்த்திய 5 வது வீரரான இங்கிலாந்தின் ஸ்டுவர்டு பிராட்

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த போட்டியின், முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி தலா 32 மற்றும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதில், பிராட் வீசிய பந்தில் கவாஜா அவுட்டானதை அடுத்து, ஸ்டுவர்ட் பிராட் தனது 599வது விக்கெட்டை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட், பிராட் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்த போது, அந்த பந்து ஜோ ரூட்டிடம் கேட்சாக மாறியது. இதன்மூலம், பிராட் தனது 166வது டெஸ்டில் முதல் இன்னிங்சின் 50வது ஓவரில் 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையை ஸ்டுவர்டு பிராட் படைத்துள்ளார்.

Tags: tamil sports