தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் நீங்கா இடம் பெற்றவர்களில் ஏபி டி வில்லியர்ஸ் ஒருவர் என்றால் மிகையாகாது.
2004-ல் தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என முத்திரை பதித்து 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் மூன்று வருடங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடினார். டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில விளையாடி 20,014 ரன்கள் குவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு ஓய்வு பெறும்போது அவருக்கு வயது 34. கூடுதலாக இரண்டு மூன்று வருடங்கள் விளையாடியிருக்கலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்தனர். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டும் அதை விரும்பியது. ஆனால், சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் விஸ்டன் கிரிக்கெட் உடன் உரையாடும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
என்னுடைய இளைய மகள் தற்செயலாக என்னுடைய கண் மீது காலால் உதைத்துவிட்டான். இதனால் வலது கண்ணில் என்னுடைய பார்வையை இழக்க ஆரம்பித்தேன். நான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது மருத்துவர்கள் இந்த பார்வையுடன் எப்படி சர்வதேச கிரிக்கெட் விளையாடினீர்கள்? என்று கேட்டனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு வருடங்கள் சிறப்பாக செயல்பட என்னுடைய இடது கண் சிறப்பாக வேலை செய்தது. தன்னுடைய பார்வை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதிக்க அடிக்கடி ஸ்கோர் போர்டை பார்ப்பேன்.
இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.