X

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோகித் சர்மா!

இந்திய அணியின் 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் கேப்டனாக தற்போது ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 34 வயதான ரோகித் சர்மா 2007-ல் ஜூன் 23 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

இந்நிலையில் ரோகித் சர்மா தனது ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட்டை விரும்புவர்களுக்காக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில் ரோகித் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் அறிமுகமாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறேன். இந்த பயணம் என் வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. முக்கியமாக இன்று நான் இந்த நிலையில் இருக்க காரணமாக இருந்த வீரர்களுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் பிரியர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அன்பும் ஆதரவும்தான் பல்வேறு தடைகளைத் தாண்டி நான் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

230 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 9283 ரன்கள் குவித்துள்ளார். இதில் 44 அரை சதமும் 29 சதமும் அடங்கும். 3 இரட்டை சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் 45 போட்டிகளில் விளையாடி 3137 ரன்கள் 8 சதமும் 14 அரை சதமும் அடித்துள்ளார். 125 டி20 போட்டிகளில் 3313 ரன்கள் குவித்துள்ள இவர் 4 சதம், 26 அரை சதம் அடித்துள்ளார்.

ரோகித் இதுவரை 400 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி ஒட்டுமொத்தமாக 15,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை ரோகித் வழிநடத்தவிருப்பதால், இந்த ஆண்டு அவருக்கு சிறப்பானது.

இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.