சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் யுவராஜ்சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் சரியாக ஆடாததால் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடுகிறார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யுவராஜ்சிங் சிந்தித்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச விரும்புகிறார். கனடாவில் நடக்கும் குளோபல் லீக் மற்றும் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நெதர்லாந்தில் நடக்கும் 20 ஓவர் போட்டிகளில் ஆடுவதற்கு அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை கோருகிறார்’ என்றார்.

37 வயதான யுவராஜ்சிங் 2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல பக்கபலமாக இருந்தார். அந்த உலக கோப்பையில் 362 ரன்களுடன், 15 விக்கெட்டும் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றது நினைவு கூரத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news