73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் மோடி. அதில் அவர் கூறியதாவது:
நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது.
பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு. இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.