சரித்திர படத்தில் நடிக்கும் அக்ஷய் குமார்
சரித்திர காலத்து சம்பவங்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன. ஏற்கனவே வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தின. தீபிகா படுகோனே நடிப்பில் ராணி பத்மினி வாழ்க்கை கதை ‘பத்மாவத்’ என்ற பெயரிலும், கங்கனா ரணாவத் நடிப்பில் ராணி லட்சுமிபாய் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரிலும் வெளியானது.
ஆந்திராவில் வாழ்ந்த உய்யலாவாடா நரசிம்ம ரெட்டி என்ற மன்னனின் வாழ்க்கை சைரா நரசிம்ம ரெட்டி” என்ற பெயரில் படமாகி உள்ளது. இதில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் திரைக்கு வருகிறது. மோகன்லால், அர்ஜுன், மஞ்சு வாரியர் நடித்துள்ள ‘மரக்கார் அரபிக்கடலன்டே சிம்ஹம்’ என்ற சரித்திர படம் மலையாளத்தில் தயாராகி விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு ‘பிருத்விராஜ்’ என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் மன்னன் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். முதன்முதலாக வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்கிறேன் என்றும், அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் இந்த படம் வெளியாகும் என்றும் அக்ஷய்குமார் தெரிவித்து உள்ளார்.