மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார் குரூப், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் பங்கேற்றுள்ளது. அஜித் பவார் துணை முதல்வராகவும், மற்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராகவும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு நேற்று மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது. அஜித் பவார் நிதித்துறை மந்திரியாகியுள்ளார்.
அஜித் பவார் கட்சியை உடைத்த சம்பவம் கடந்த ஜூலை 2-ந்தேதி அரங்கேறியது. அதன்பின் சரத் பவார் முறைமுகமாக அஜித் பவரை கடுமையாக விமர்சனம் செய்தார். அஜித் பவார் விமர்சனம் செய்யவில்லை என்றாலும் கட்சியை கைப்பற்றுவதற்காக சரத் பவாருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சரத் பவாருக்கு வீட்டிற்கு அஜித் பவார் நேற்று சென்றுள்ளார். சரத் பவாரின் மனைவின் பிரதிபா பவாருக்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டில மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதன்பின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்ததும், அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
2019-ம் ஆண்டு அஜித் பவார் திடீரென பட்னாவிஸ் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் பதவி ஏற்றார். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட இருந்த பிளவை தடுத்து நிறுத்த பிரதீபா மூளையாக செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.
மேலும், கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுக்க ஆலோசனைகளையும் அவ்வப்போது தெரிவித்துள்ளார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆனால், அரசியல் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது கிடையாது.