சரத் பவாரின் கூக்லி இனி வேலை செய்யாது – பா.ஜ.க தலைவர் தாக்கு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாரின் கூக்லி இனிமேல் வேலை செய்யாது என பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தன. ஆனால், உத்தவ் தாக்கரே தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றதால் பிரச்சினை உருவானது.
பின்னர் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றார். தற்போது, உத்தவ் தாக்கரே கட்சி உடைந்து ஏக் நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை தன்வசப்படுத்தி முதலமைச்சராக உள்ளார்.
பா.ஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பூசல் நடைபெற்றபோது, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவின் பட்நாவிஸ் முதலமைச்சராகவும், சரத் பவாரின் உறவினர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.
ஆனால் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க இருந்த கடைசி நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள் எனத் சரத் பவார் அறிவித்தார். இதனால் பட்நாவிஸ் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 80 மணி நேரத்தில் பட்நாவிஸ் முதல்வர் பதவி முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்தில் சரத் பவாரின் விளையாடிய விளையாட்டு என்ன? என்பதை பா.ஜனதா மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே தனியார் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.
சரத் பவார் குறித்து சந்திரசேகர பவன்குலே கூறியதாவது:-
சரத் பவார் பா.ஜனதா உடன் சேர்ந்து ஆட்சியமைக்க முதலில் சம்மதம் தெரிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போட்டார் என பட்நாவிஸ் தெரிவித்தார். அப்போது, எங்கே, எப்போது கூக்லி வீசுவது என்று எனக்கு தெரியும் என சரத் பவார் பதில் அளித்திருந்தார்.
அதிகாரத்திற்காக எங்கும் செல்வார் என்பதுதான் சரத் பவாரின் வரலாறு. அதிகாரத்திற்காக 2014-ல் பா.ஜனதாவுடன் இணைய முயற்சி மேற்கொண்டார். 2019-ல் அரசியல் சதித்திட்டத்தை தீட்டினார். அவரது சதித்திட்டத்தில் அஜித் பவாரை சிக்கவைத்து, அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க முயற்சித்தார். அஜித் பவார் மீது மக்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மனதில் ஒரு கேள்விக்குறியை எழுப்பினார்.
2019-ல் அவர் பயன்படுத்தியதுதான் அவருடைய கடைசி கூக்லி. இனிமேல் அவருடைய கூக்லி வேலை செய்யாது. மகாராஷ்டிரா மக்களுக்காக பட்நாவிஸ் சேவையாற்றுவார்” என்றார். சர்த் பவாரின் மாமனார் ஒரு டெஸ்ட் வீரர். அவர் கூக்லி சுழற்பந்து வீச்சாளர். சரத் பவார் ஐசிசி சேர்மனாக இருந்தவர். ஆகவே, கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் எங்கே, எப்போது ‘கூக்லி’ பந்து வீச வேண்டும் என்பது தெரியும் என்று சரத் பவார் கூறியிருந்தார்.
சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக லெக்ஸ்பின் பந்து வீச்சாளர்கள் திடீரென பேட்ஸ்மேனை திணறடிக்க ‘கூக்லி’ பந்து வீசசு முறையை பயன்படுத்துவார்கள். அதேபோன்று அரசியலில் முக்கியமான கட்டத்தில் தனது முடிவை அறிவிப்பேன் என்று சரத் பவார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.