Tamilசினிமா

சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘பட்டின பிரவேசம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து இவரது உடல் சென்னை, தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, நான் நடிகனாகுவதற்கு முன்பே எனக்கு சரத்பாபுவை தெரியும். அருமையான மனிதர், நல்ல நண்பர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் கோபத்துடன் இருந்து நான் பார்த்ததே இல்லை.

நான் அவருடன் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. என் மேல் அவருக்கு அளவு கடந்த அன்பு இருந்தது. நான் புகைப்பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவார். புகைப்பிடிப்பதை நிறுத்து ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று கூறுவார். அவர் இருந்தால் நான் புகைப்பிடிக்க மாட்டேன். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியவர் இப்போது இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று பேசினார்.