மகேஷ்பாபு நடிப்பில் கடந்த மாதம் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ‘சரிலேறு நீக்கெவரு’ என்கிற படம் வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இப்போது வரை படம் தியேட்டர்களில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அனில் ரவிபுடி இயக்கிய இந்த படத்தை தில் ராஜு, அணில் சுங்கரா ஆகியோருடன் மூன்றாவது தயாரிப்பாளராக மகேஷ்பாபுவும் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. இப்படத்தில் நடிப்பதற்கு சம்பளம் என எதுவும் பேசாத மகேஷ்பாபு படத்திற்காக அட்வான்ஸ் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.
அதேசமயம் வழக்கமாக அவருக்கு கொடுக்கப்படும் சம்பளத் தொகையான 20 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய சுமை இல்லாமல் இந்த படத்தை தயாரித்து முடித்தனர் தில் ராஜுவும் அனில் சுங்கராவும். தியேட்டர் வெளியீட்டு உரிமைகள் அல்லாத உரிமைகள், அதாவது சாட்டிலைட், எப்எம் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் என அனைத்து உரிமங்களும் மகேஷ்பாபுவுக்கு சம்பள தொகையாகவும் மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற ரீதியில் பங்குத் தொகையாகவும் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
இவற்றின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 82 கோடி ரூபாய் என்கிறார்கள் தெலுங்கு சினிமா வட்டாரத்தில். அந்தவகையில் தனது சம்பளத்தை விட 300 சதவீதம் அதிகமாக ‘சரிலேறு நீக்கெவரு’ படம் மூலம் சம்பாதித்திருக்கிறாராம் மகேஷ்பாபு.. இனி அடுத்தடுத்து நடிக்கும் தனது படங்களிலும் இதே பாணியை அவர் பின்பற்றப் போவதாக சொல்லப்படுகிறது.