Tamilசெய்திகள்

சமையல் கியாஸ் சிலிண்ட விலை ஏற்றத்திற்கு பா.ஜ.க பதில் சொல்லியே ஆக வேண்டும் எம்.பி ஜோதிமணி பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பல்வேறு திட்ட பணிகளை தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தொடங்கி வைத்த ஜோதிமணி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகியபோது சிலிண்டர் விலை ரூ.450 ஆக இருந்தது. அப்போது கச்சா எண்ணை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்திருந்தது.

அப்போதும் கூட மக்களின் நலன் கருதி சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் பா.ஜ.க. பதவி ஏற்று கடந்த 8 ஆண்டுகளில் தற்போது ரூ.1000த்துக்கு மேல் விற்பனையாகிறது. 2014ல் கச்சா எண்ணை இருந்த விலையை விட தற்போது வெகுவாக குறைந்துள்ளது. அப்போதும் கூட சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் ஒரு லிட்டர் ரூ.100யை தாண்டி விற்கப்படுகிறது. எரிவாயு விற்பனையின் மூலம் மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த பணம் மீண்டும் மக்களுக்கு கிடைக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்கிறது. இந்த விலை உயர்வுக்கு பிரதமர் மோதி பதில் சொல்லியே ஆக வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் விலை ஏற்றாமல் மற்ற நேரங்களில் தொடர்ந்து விலையை அதிகரிப்பது மக்களின் கோபத்தை மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.