X

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் இதர வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்திய குடும்பங்கள் வருடத்துக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு ஆர்டர் செய்யும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஒரு சிலிண்டர் விலை ரூ.734 என நிர்ணயிக்கப்பட்டது. மறுமாதமே (பிப்ரவரி) சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.147 அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை ஆனது. அதனைத்தொடர்ந்து சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் சிலிண்டர் விலை ரூ.610 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில் இந்தமாதத்துக்கான (டிசம்பர்) கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந்தேதி மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.660 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. அந்தவகையில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்திருந்தது. தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துவந்த நிலையில் இந்த திடீர் உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் இந்த மாதம் முடிவதற்குள் மீண்டும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் சென்னையில் ரூ.660 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.710-க்கு விற்பனை ஆகிறது. இந்த மாதம் முடிவதற்குள்ளாகவே கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக அதிர்ச்சியில் இருக்கும் மக்களுக்கு கியாஸ் சிலிண்டரின் தொடர் விலையேற்றம் இன்னும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் கியாஸ் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. அதேபோல 5 கிலோ கமர்ஷியல் கியாஸ் சிலிண்டர் மற்றும் ஓட்டல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும் 19 கிலோ கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.