இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்து வந்தது.
ஆனால், சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. அதன் பிறகும் சர்வதேச சந்தை விலை குறைந்திருப்பதால், அதுபற்றி விவாதிக்க மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெரும் உற்பத்தியாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டினார். அதன்பிறகு அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்திருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு வலியுறுத்தினோம். விலையை 10 ரூபாய் குறைக்குமாறு கூறினோம். அதற்கு பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.10 குறைப்பதாக உறுதி அளித்தனர்.
இந்த எண்ணெய்கள் விலை குறைந்தால், இதர சமையல் எண்ணெய்கள் விலையும் குறைந்துவிடும். மேலும், ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபாடாக இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரி விலையை நிர்ணயிக்குமாறு கூறினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.