X

சமூக வலைதள குழுக்களில் இருந்து வெளியேறுமாறு அரசு அதிகாரிகளுக்கு மணிப்பூர் அரசு உத்தரவு

மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம், தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்தபடி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சமூக வலைதள பயன்பாடும் ஒரு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.

இதை தொடர்ந்து மணிப்பூரில், “பிரிவினைவாத, தேசவிரோத, வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல்களை” ஊக்குவிக்கும் எந்தவொரு சமூகவலைதள குழுக்களில் இருந்தும் வெளியேறுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசு துறைகளும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித்சிங் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Tags: tamil news