சமூக வலைதள கணக்குடன் ஆதார் என்னை இணைக்க வேண்டும் – இயக்குநர் பூரி ஜெகன்நாத் யோசனை
தெலுங்கில் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவர் இயக்கத்தில் தற்போது லிகர் என்கிற படம் உருவாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சமூக வலைதள பக்கத்திலும் ஏதாவது ஒரு முக்கிய விஷயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது, ஒவ்வொருவருடைய சமூக வலைதள கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென அவர் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்
இது குறித்து பூரி ஜெகன்நாத் தெரிவித்துள்ளதாவது: “நாளுக்கு நாள் சமூக வலைதளத்தில், பிடிக்காதவர்களை கிண்டல் செய்வதும், அவர்கள் மீது அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு 1000 லைக்குகள் தான் வந்திருந்தன, ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக அந்த புகைப்படத்தை 10,000 பேர் டிஸ்லைக் செய்திருந்தனர்.
யார் இவர்கள்? எந்த மாதிரி மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் பக்கத்தில் நிற்பதற்கே தகுதி இல்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் எதை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
இது போன்றவர்களின் சமூக வலைதள கணக்குகளை, ஆதார் எண்ணுடன் இணைக்கும்போது தான், அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்கிற விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.