சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட இயக்கம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் விழாவில் பேசியதாவது:
சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் ஒரு நிருபர், மக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு என்ன செய்வீர்கள், என்று கேட்கிறார். “காசு இல்லாததால் மருந்து மாத்திரை சாப்பிடுறதில்ல.. இனி மாத்திரை வாங்குவேன்” என்று ஒரு பாட்டி சொல்கிறார்கள். இன்னொரு பெண்மணி சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், “தினமும் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன்.. இந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா… காலையில ரெண்டு இட்லி சாப்பிடுவேன்” என்று சொன்னார்கள்.
இந்த இரண்டு பதிலும் எனக்கு நெகிழ்ச்சியை தந்தாலும், காலத்திற்கும் எண்ணி நான் பெருமைப்படுகிற மாதிரியான ஒரு பதிலை, நாம் எந்த நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோமோ அதை ஒரு வரியில் சொல்கின்ற மாதிரி இன்னொரு பெண்மணி ஒன்று சொன்னார்… “சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன்” என்று அவர் சொன்னார். அதாவது, “சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடப்பேன்” என்று அவர் சொன்னார். இதைவிட இந்தத் திட்டத்திற்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்? இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப் போகின்றது. நாள்தோறும் உதிக்கும் உதயசூரியன் போல உங்களுடைய இந்த உதயசூரியன் ஆட்சியும் உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகின்றது. இது தி.மு.க.வுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி! மிகவும் முக்கியமான வாக்குறுதி!
“இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள். இவர்களால் தர முடியாது” என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதுனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாக தெரியும். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி. இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல-தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு இருக்கிறது.
நான் போட்ட ஒரு கையெழுத்து, பலரது வாழ்க்கையை மாற்ற போகிறது என்ற அந்த உரிமையை எனக்குக் கொடுத்தவர்களே நீங்கள்தான்! மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். மக்களுக்காகதான் பயன்படுத்துவேன். இந்த இரண்டு திட்டங்கள், நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்தத் திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் உழைக்கக்கூடிய பெண்களுடைய உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்! இரண்டாவது நோக்கம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்கப் போகின்றது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் பெண்கள் வாழ உறுதுணையாக இருக்கும்.
உழவுக் கருவிகளை கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறினால்கூட பெண்களுடைய உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கங்களாலும், பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டார்கள். பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தினுடைய உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்” என்றெல்லாம்கூட எழுதி வைத்திருந்தார்கள்.
இன்றைக்கு மானமும், அறிவும் உள்ள யாரும் அந்த மாதிரி பேசுவதில்லை. பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளுகின்ற இயற்கை சுழற்சியைகூட தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார்கள். ஓரமாக ஒதுக்கி வைத்தார்கள். படிக்கக் கூடாது- வேலைக்கு போகக்கூடாது-வீட்டுப்படியை தாண்டக்கூடாது அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று பழமைவாத சிந்தனைகளை வைத்து பெரும்பான்மை பெண்ணினத்தை முடக்கி வைத்தார்கள். இது அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமில்லை, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அனுபவித்த துன்பம்! 8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது. ஆனாலும், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பேசுகின்ற பிற்போக்குவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மேல் வெறுப்பு, தீராத கோபம்… ஏனென்றால்..? சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி செய்தால், அது சட்டபடி குற்றம். கைம்பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. பெண் குழந்தைகள் அனைவரும் படிக்க பள்ளி-கல்லூரிக்கு வந்து விட்டார்கள். இனி, உனக்கு படிப்பு எதுக்கு என்று சொல்ல முடியாது. நீ வேலைக்கு போகக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது.
இந்தச் சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட இயக்கம்! இன்றைக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படிக்கிறார்கள். அதுவும் நன்றாக படிக்கிறார்கள். அனைத்து வேலைகளுக்கும் பெண்கள் வந்துவிட்டார்கள். இந்த பாலினச் சமத்துவத்தை கொண்டு வந்து பெண்ணும், ஆணும் சரிநிகர் என்று உயர்த்தியதுதான் நம்முடைய திராவிட மாடல்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தந்தை பெரியார் சொன்ன மாதிரி, ஆணை விடவும் உயர்ந்தவர்களாக பெண்களை உயர்த்துவதுதான் திராவிட மாடல்! “எங்கள் அம்மா இல்லை என்றால் நான் இல்லை” என்று எத்தனையோ சாதனை மாணவிகள் பேட்டி தருவதை பார்த்திருக்கின்றோம்.
ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? ஆனால் ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்று சிலர் சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். ‘உங்கள் மனைவி வேலைக்கு போகிறார்களா?’ என்று கேட்டால், “இல்லை” என்று மட்டும் சொல்லாமல் “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள்” என்று சிலர் சொல்வார்கள். வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்? வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கின்ற வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மகளிருக்கான உரிமையை கொடுக்கவேண்டும், அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம்தான் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். தாயின் கருணை! மனைவியின் உறுதுணை! மகளின் பேரன்பு! இவையெல்லாம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை! உண்மையில், உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான்! என்னுடைய தாய் தயாளு அம்மையார், கருணையே வடிவானவர்கள். சிறிய வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்னைக்கு மழை வரக் கூடாது என்று வேண்டிக் கொள்வார்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.