X

சமூக ஆர்வளர் முகிலன் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆவண படத்தை முகிலன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் வெளியிட்டார்.

ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர் சென்னையில் இருந்து ரெயிலில் மதுரைக்கு சென்றபோது அவர் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் சண்முகம் தெரிவித்தார். திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்துச் சென்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடன் கூறினார். முகிலன் ஆந்திர காவல்துறையினர் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டதை பார்த்ததாகவும், முகிலன் தாடியுடன் காணப்பட்டார் எனவும், சிபிசிஐடி உடனடியாக ஆந்திர காவல்துறையை அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனைதொடர்ந்து முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து முகிலன் திருப்பதியில் இருக்கிறாரா என்பதை விசாரித்து தெரிவிக்க ஆந்திர போலீசிடம் சிபிசிஐடி உதவிக்கோரியது.

இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

பின்னர் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருகின்றனர். முகிலனை விடுவிக்கக்கோரி அவரின் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.