பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மாநிலத்தில் மிகப்பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி, தேர்தலில் தோல்வியை தழுவியது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் வெறும் 15 இடங்கள் மட்டுமே இந்த கூட்டணிக்கு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்துள்ளது. அங்கு விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று முன்தினம் அறிவித்தார். சமாஜ்வாடி தலைவர் தனது கடமைகளை நிறைவேற்றி, தனது மக்களை தன்பக்கம் இழுத்தால் எதிர்காலத்தில் இணைந்து செயல்பட முடியும் என அவர் கூறினார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் ஒரு சோதனை முயற்சியாகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக லக்னோவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஆம். பாராளுமன்ற தேர்தலில் சோதனை முயற்சியாகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். இந்த முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தரலாம். ஆனால் குறைந்தபட்சம் உங்கள் குறைபாடுகளையாவது அறிய முடியும். அந்தவகையில் தேர்தலில் எங்களது குறைபாடுகளை கண்டறிய முடிந்தது’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘என்னைப்போல மாயாவதிஜியையும் மதிக்கிறேன் என நான் ஏற்கனவே கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். மாநிலத்தில் நடைபெற இருக்கிற சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, எங்கள் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து ஒரு திட்டத்தை வகுப்போம்’ என்றும் கூறினார்.