ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் படம் ‘சபாபதி’. ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.ரமேஷ் பாபு தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரீத்தி வர்மா நாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி புகழ், வம்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
’சபாபதி’ படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படம் குறித்து பேசிய நடிகர் சந்தானம், ”இந்த படத்தில் திக்கி…திக்கி…பேசும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படி ஒரு பிரச்சனை உள்ளவர்கள் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள், சிலரால் எப்படி அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதை படத்தில் பேசியிருப்பதோடு, அனைத்து தரப்புக்கும் பிடித்த நல்ல குடும்ப நகைச்சுவை படமாக இருக்கும். நான் இந்த படத்தில் அதிகம் பேச மாட்டேன். ஆனால், என்னை சுற்றி இருப்பவர்கள் அதிகமாக பேசி சிரிக்க வைப்பார்கள்.
இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இந்த கதையை என்னிடம் சொன்ன போது நான் நான்கு திருத்தங்களை கூறினேன். அதன்பறி மாற்றுவதற்கே அவர் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டார். காரணம், அந்த அளவுக்கு அவர் கதையை மிக நேர்த்தியாக அமைத்திருந்தார். நான் கூறிய திருத்தத்தை செய்தாலும், அதன் மூலம் கதைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர் செய்வதற்காகவே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டார். இது சந்தானம் படமாக இருக்காது. ‘சபாபதி’ என்ற கதாப்பாத்திரத்தில் படமாக தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.” என்றார்.
இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் பேசுகையில், “8 வருட தொடர் முயற்சிக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு தான் இந்த படம். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் குமார் மற்றும் சந்தானத்திற்கு நன்றி. இந்த படம் வித்தியாசமான படம் என்பதை படம் பார்க்கும் போது ரசிகர்கள் உணர்வார்கள். இதுபோன்ற ஒரு கதாப்பாத்திரத்தில் சந்தானம் சார் இதுவரை நடிக்கவில்லை. அவருடைய நடிப்பும், எம்.எஸ்.பாஸ்கார் சார் நடிப்பும் பெரிதும் பேசப்படும். சபாபதி என்ற தலைப்பு ஏ.வி.எம் நிறுவனத்துடையது. அந்த தலைப்பில் வெளியான முழுநீள காமெடி படத்தின் ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். எனவே, அந்த படத்தின் கண்ணியம் கெடாமல் இந்த படத்தை நான் இயக்கியிருக்கிறேன். இந்த படத்தில் காமெடியோடு, பல மெசஜ்களை சொல்லியிருக்கிறேன். மிஸ்டிரி, செண்டிமெண்ட் என அனைத்தும் படத்தில் இருக்கும். தாழ்வு மனப்பான்மை என்பது பெரும்பாலனவர்களுக்கு இருக்கும் பிரச்சனை. அந்த குறையை நம் மனதில் இருந்து களையும் விதத்தில் இந்த படத்தின் கதையம்சம் இருக்கும். நிச்சயம் இது ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.” என்றார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில், “இந்த படத்தில் நடித்ததை விட சிரிச்சது தான் அதிகமாக இருக்கும். ஏ1 படத்தில் சந்தானத்தின் அப்பாவாக நடித்தேன். அதில் சுத்தமான மெட்ராஸை பேசினேன். இந்த படத்தில் சுத்தமான தமிழ் பேசியிருக்கிறேன். நானும், சந்தானமும் ஆரம்ப காலத்தில் இருந்து அண்ண, தம்பி போல பழகிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் இருந்த புரிதலால் இந்த கதாப்பாத்திரத்தை நான் சிறப்பாக செய்ய உதவியது. இந்த படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தால் அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவோம். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் போது எனக்கு கவலையாக இருந்தது. மிக அருமையான கதையை மிக அருமையான முறையில் இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் படமாக்கியிருக்கிறார். இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.” என்றார்.
தயாரிப்பாளர் ரமேஷ் குமார் பேசுகையில், “எனக்கு இது முதல் படம். சந்தானம் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ரொம்ப கஷ்ட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. படம் ரொம நல்லா வந்திருக்கு. அனைவருக்கும் நன்றி.” என்றார்.