கேரளாவின் பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்த ரேவதிநாள் பி. ராமவர்ம ராஜா உள்ளிட்டோர் கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கேரளாவில் உள்ள 150 கோவில்களை இணைத்து திருவாங்கூர்-கொச்சி இந்து சமய நிறுவன சட்டத்தை கேரள அரசு இயற்றி உள்ளது. ஆனால் சபரிமலை கோவில் என்பது தனி அடையாளமாக உள்ளது. எனவே சபரிமலை கோவிலுக்கு என்று தனிச் சட்டத்தை உருவாக்க கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
குறிப்பாக திருவாங்கூர்-கொச்சி இந்து நிறுவனங்கள் சட்டத்தில், கோவில் நிர்வாக குழுவில் மூன்றில் ஒரு பகுதி பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் சபரிமலை கோவிலில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி வழங்காத பாரம்பரியம் உள்ளது. எனவே, கோவிலை நிர்வாகம் செய்யும் பொறுப்பில் பெண்களை இடம் பெற செய்யக் கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு கடந்த ஆண்டு நவம்பர் 20-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, சபரிமலை கோவில் நிர்வாகத்துக்கு என்று தனிச்சட்டம் ஒன்றை கேரள அரசு தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும், சபரிமலை கோவிலை நிர்வகிப்பதற்காக தயாரிக்கப்படும் தனி மசோதா வரைவு நிலையில் இருப்பதாகவும், அது தயாரானதும் தாக்கல் செய்யப்படும் என்றும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் நீதிபதிகள், பந்தளம் அரச குடும்பத்தினர் தங்கள் வசம் உள்ள சபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் நகைகளை ஒப்படைப்பது குறித்து அரச குடும்பம் வருகிற வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.