Tamilசெய்திகள்

சபரி மலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய 21 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று கேரள வருவாய் துறை மந்திரி ராஜன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் நாளை (புதன்கிழமை) முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடை உத்தரவு வருகிற 21-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே பம்பை, நிலக்கல் பகுதிகளில் முகாமிட்டு உள்ள பக்தர்கள் திரும்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.