சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இந்த போராட்டங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன. ஆனால் இந்த எதிர்ப்புகளையும் மீறி தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் கடந்த ஜனவரி மாதம் சபரிமலையில் ஐயப்பனை தரிசித்தனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதற்கு சபரிமலை விவகாரமே காரணம் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. ஆனால் இதை முதல்-மந்திரி பினராயி விஜயன் மீண்டும் நிராகரித்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலிலும், பாலா சட்டசபை இடைத்தேர்தலிலும் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததற்கு சபரிமலை விவகாரமே காரணம் என யாரும் நினைக்க தேவை இல்லை. பா.ஜனதா எப்போதும் சபரிமலையை பயன்படுத்தும். ஆனால் அது எங்களை பாதிக்காது.
சபரிமலை விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வருவோம் என பா.ஜனதாவினர் ஏற்கனவே கூறியிருந்தனர். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வரமுடியாது என வெளிப்படையாக கூறுகின்றனர். இது, அவர்களை நம்பியவர்களை ஏமாற்றுவது இல்லையா?
எனவே இது அவர்களைத்தான் பாதிக்கும், எங்களை அல்ல. சபரிமலை பக்தர்களுக்கு துணை நிற்போம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். இதைத்தான் கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் தெரிவித்து வருகிறோம்.
சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதே எங்கள் நிலைப்பாடு. இந்த பிரச்சினையில் கோர்ட்டு வேறு ஏதாவது உத்தரவிட்டால், அதன்படிதான் செயல்படுவோம்.
நமது நாடு அரசியல் சட்டப்படியே ஆளப்படுகிறது. அரசியல் சட்டப்படிதான் நாம் செயல்பட முடியும். இந்த சட்டத்தை திருத்துவதற்கு பலதரப்பும் விரும்புகின்றன. அது வேறு விஷயம். தற்போதைய நிலையில் அரசியல் சட்டப்படிதான் நாம் செயல்பட முடியும்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.