Tamilசெய்திகள்

சபரிமலை வழக்கு – 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைவதற்கு 1991-ல் கேரள ஐகோர்ட் தடை விதித்தது. இதை 2018 செப்டம்பரில் ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், அனைத்து வயது பெண்களும், பாலின வேறுபாடுகளின்றி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

உடல் ரீதியான வித்தியாசங்களின் அடிப்படையில் பெண்கள் மீது விதிக்கப்படும் தடை, அரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்த தடை அரசியல் சட்டத்தில், சம உரிமைகளை அளிக்கும் சட்டப்பிரிவு 14 மற்றும் மதத்தை கடைபிடிக்கும் உரிமையை அளிக்கும் சட்டப்பிரிவு 25 ஆகியவற்றிற்கு முரண்பாடானது என்று கூறியது.

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் இந்த தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பின் விளைவாக, போராட்டங்கள் வெடித்தன. பல பெண் செயல்பாட்டாளர்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றனர். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. 3:2 என்ற பெரும்பான்மையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அதில், ‘பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல வேறு கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமை உள்ளது. மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது. மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனவே, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம்’ என்றார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பாலி நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *