சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் – இன்று பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு, 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த பாரம்பரிய வழக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கும்படி தீர்ப்பு வழங்கியது. ஆனால், பெண்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி போராடியதால், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை அனுமதிக்க தடை விதிக்க வகை செய்யும் தனி நபர் மசோதா, பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி பிரேமச்சந்திரன் (கொல்லம்) இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். சபரிமலை விவகாரத்தில் 2018, செப்டம்பர் 1-ம் தேதிக்குள் முன்பிருந்த நிலை தொடரவேண்டும் என மசோதாவில் குறிப்பிட்டுள்ளார்.