Tamilசெய்திகள்

சபரிமலையில் இன்று மகர ஜோதி காட்சியளித்தது

சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு மகர விளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடந்தது.

பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் தை முதல் நாள் மகர விளக்கு பூஜை திருவிழா கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், ஐயப்பனே ஜோதி வடிவில் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.

மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்து வந்தனர்.

பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்ட திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொண்டனர். பின்னர் அந்த ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து  தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி காட்சி அளித்தது. மூன்று முறை  தொடர்ந்து மகர ஜோதியை பக்தர்கள் தரிசித்தனர். அப்போது சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர்.

சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.