Tamilசெய்திகள்

சபரிமலையிக்கு வந்து மாலை போட்டுக்கொண்ட பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

அவ்வாறு செல்லக்கூடிய பக்தர்கள் கார்த்திகை 1-ந்தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். பின்பு அவர்கள் 41 நாட்கள் அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த விதி முறைகள் தற்போது வரை நீடித்து வருகிறது.

கடந்த ஆண்டு தினமும் ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தினமும் 30ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு என்ற நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை “நெகட்டிவ்” சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகளால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், வழக்கமாக கார்த்திகை மாதம் வந்தவுடன் மாலை அணிந்து விரதம் இருந்தே வருகிறார்கள். சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யமுடியாத பக்தர்கள், தங்களது ஊரின் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் வழக்கம் போல் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வருகிறார்கள்.

கார்த்திகை மாதம் இன்று (புதன்கிழமை) பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர்.

கார்த்திகை மாதம் பிறந்தாலே எங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோ‌ஷம் கேட்கும். கார்த்திகை முதல் நாளான இன்று அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

காலையில் இருந்தே பல பக்தர்கள் மாலை அணிந்தபடி இருந்ததால் அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் சரண கோ‌ஷம் கேட்டபடி இருந்தது. பல கோவில்களில் ஐயப்பன் பாடல்கள் ஒலித்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில்களில் இன்று பக்தர்கள் திரண்டு சென்று மாலை அணிந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து செல்வது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு 20 லட்சம் பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு 13 லட்சம் பேர் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் அனைவரும் ஆன்லைனில் முன்பதிவு செய்தே சபரிமலைக்கு செல்ல வேண்டும். முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இந்த ஆண்டு சபரிமலை செல்வதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.

அதேநேரத்தில் இன்று மாலை அணிந்து விரதம் இருப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவாகவே காணப்பட்டது. மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் இன்று காலை முதல் சுமார் 3 ஆயிரம் பேர் மாலை அணிந்தனர்.

பக்தர்களிடம் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா கட்டுப்பாடு ஆகிய காரணங்களால் சபரிமலை செல்வதில் தயக்கம் இருக்கிறது. மேலும் பக்தர்கள் சபரிமலை செல்ல தயக்கம் காட்டுவதில் இன்னொரு காரணமும் இருக்கிறது.

கொரோனா பரவலுக்கு பிறகு சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்படவில்லை. சபரிமலையில் அதிகாலை 5.30 மணிமுதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் நெய்அபிஷேகம் பிரதானமானது.

இருமுடி கட்டி நெய் சுமந்து செல்லும் பக்தர்கள் நெய் அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவார்கள். ஒருவேளை 12 மணிக்கு பிறகு பக்தர்கள் சன்னிதானம் செல்ல நேர்ந்தால் அங்கேயே இரவில் தங்கி விட்டு மறுநாள் நெய் அபிஷேகத்தில் பங்கேற்பார்கள்.

ஆனால் தற்போது சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லாததால் 12 மணிக்கு பிறகு செல்ல நேர்ந்தால் நெய் அபிஷேகத்தில் பங்கேற்க முடியாமல் போய்விடுமோ என்ற தயக்கமும் இருக்கிறது.

இருந்தாலும் வழக்கம் போல் அவர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். ஒருவேளை சபரிமலை செல்ல அனுமதி கிடைக்காவிட்டாலும் உள்ளூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வரலாம் என்ற எண்ணத்திலும் பலர் மாலை அணிந்து உள்ளனர்.

வழக்கமாக மகாலிங்கப்புரம் ஐயப்பன் கோவிலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி கட்டி செல்வது வழக்கம். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்பன் கோவில்களில் இருமுடி கட்டி சபரிமலை செல்வார்கள். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சற்றே குறைந்து உள்ளது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சபரிமலை செல்லும் பக்தர்களின் முன்பதிவும் குறைவாகவே உள்ளது. ஜனவரி 16-ந் தேதி வரை பக்தர்கள் சபரிமலை செல்ல முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் முன்பதிவு காலியாகவே உள்ளது.