சனி, ஞாயிற்று கிழமைகளில் மாமல்லபுரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (28-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியை பொதுமக்கள் டிக்கெட் பெற்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டியை காண பொதுமக்கள் செல்ல வசதியாக மாமல்லபுரத்திற்கு கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவான்மியூர், தாம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து அதிகளவில் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:-

செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண மக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். மக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக உள்ளோம். வார இறுதி நாட்களில் போட்டியை காண செல்ல வாய்ப்பு இருப்பதால் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டு வருகிறோம். பொதுமக்கள் பயன்பாட்டை பொறுத்து தான் பஸ் சேவையை அதிகரிக்க முடியும். தற்போது மாமல்லபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் ஆய்வு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் மாமல்லபுரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர வீரர்களுக்கு தனியார் ஆபரேட்டர்கள் மூலம் பஸ்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools