X

சனாதான விவகாரத்தில் திமுக தலைவர்களின் கருத்துக்கு நாங்கள் உடன்படவில்லை – காங்கிரஸ் அறிவிப்பு

சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசாவும் சனாதன தர்மத்துக்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார்.

சனாதன தர்மத்தை எச்.ஐ.வி. வைரசுடன் ஒப்பிட்டுள்ள அவர், இது சமூக களங்கம் என்றும் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர்களின் இந்த கருத்துகளுக்கு பா.ஜனதா போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இந்த விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? என்பதை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர்களின் இந்த கருத்துகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன்கெரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி எப்போதும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. அனைத்து மதங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கும் இடம் உண்டு. இத்தகைய கருத்துகளை (தி.மு.க. தலைவர்களின் கருத்துகள்) அரசியல்சாசனம் அனுமதிக்கவும் இல்லை, காங்கிரஸ் கட்சி இத்தகைய கருத்துகளை நம்பவும் இல்லை. காங்கிரசின் வரலாற்றை நீங்கள் அறிந்திருந்தால், நாங்கள் எப்போதும் இந்த நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறோம் என்பதை அறிவீர்கள். இவ்வாறு பவன் கெரா தெரிவித்தார்.

சனாதன தர்மம் விவகாரத்தில் தி.மு.க.வை காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்விக்கு, ‘இதுபோன்ற கருத்துகளுடன் நாங்கள் உடன்படவில்லை என்று நான் சொன்னேன்’ என பதிலளித்தார்.

Tags: tamil news