சனாதான கருத்துக்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:
இந்தக் கருத்திற்கு நாட்டு மக்களிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கு வங்கத்தில், ராம நவமி கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தினர், கல்வீசினர். வெடிகுண்டுகளை வீசினர். பீகார், உ.பி.யில் அவர்கள் கடவுள் சீதா தேவி மற்றும் ராமாயணத்திற்கு எதிராக பேசினர். தற்போது சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுகின்றனர். அவர்கள் ஹிந்து விரோதிகள், சனாதன தர்ம விரோதிகள், ஓபிசி விரோதிகள்.
உதயநிதியின் கருத்தை, தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எதிர்க்கவில்லை. வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்காக நீங்கள் சமூகத்தைப் பிரித்து உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக கீழ்த்தரமாக செயல்படக் கூடாது. உங்கள் அரசின் சாதனைகளை வெளிக்காட்டிக்கொள்ள நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. இந்தியா கூட்டணியின் தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால், சமூகத்தைப் பிளவுபடுத்தும் அளவுக்கு கீழ்த்தரமாக செயல்படுகிறீர்கள் என தெரிவித்தார்.