Tamilசெய்திகள்

சனாதனம் பற்றி பேசிய உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடருவோம் – இந்து முன்னணி அறிவிப்பு

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற நக்சல் இடதுசாரி பயங்கரவாத அமைப்பு சனாதனம் ஒழிப்பு மாநாடு என்ற கூட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நடத்தியது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டியது சனாதனதர்மம் என்றும் பேசியுள்ளார். சனாதனம் சமநீதிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது, மாற்றத்திற்கு எதிரானது என கூறியுள் ளார். சனாதன தர்மத்தை தெரிந்து பேசினாரா? அல்லது நிதானத்தில் இல்லாமல் உளறினாரா என்று தெரியவில்லை.

உதயநிதி பேச்சிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை என மழுப்பலாக பேசி சமாளிக்க பார்க்கிறார். இதேபோல் மற்ற தர்மங்களை பற்றி பேசினால் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்பாரா? என்பதற்குப் பதில் கூறியாக வேண்டும்.

சனாதனம் என்பது இந்து தர்மத்தை குறிப்பிடுவது. அது இந்துக்களின் நம்பிக்கை, அதனை ஒழிப்போம் என்பது மத வெறுப்பு பிரசாரம்தான். இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்தது தி.மு.க. கூட்டணி கட்சிகள் சேர்ந்து நடத்திய நாடகம். அந்த சட்டவிரோத கூட்டத்தில், அரசியல் சாசன சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர்கள் உதயநிதியும், சேகர்பாபுவும் கலந்து கொண்டது சட்டவிரோத செயல்.

சமீபத்தில் மதவெறுப்பு பேச்சின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கருத்து கூறியுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் மீதும் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும்.

மேலும் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரும் தொடர்ந்து இந்து விரோதமாக பேசி வருகின்றனர். இந்து மத வெறுப்பு கருத்துக்களை ஈ.வெ.ரா, அண்ணா துரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எப்படி எல்லாம் பேசி கேவலப்படுத்தினார்கள் என்பதை இந்துக்கள் மறந்திருக்க முடியாது.

ஆட்சியில் இல்லாதபோது அழுது புரண்டு இந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கிறோம் என நாடகம் போடுவதும். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல இந்துக்களை கேவலப்படுத்தி பேசுவதும் இனி நடக்காது. இது நவீன தொழில்நுட்பகாலம். இளைஞர்கள் திராவிட தகிடு தத்தங்களை உணர்ந்து விட்டார்கள். அதே சமயம் பொறுப்பு உள்ள பதவியில் இருப்பவர்கள் மதவெறுப்பு பேச்சு பேசியதன் மீது தமிழக காவல்துறை, இங்குள்ள நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க தயங்கலாம். ஆனால் மேல் நீதிமன்றத்தில் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

மக்கள் மன்றத்திலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்துக்கள், தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தோற்கடித்து பாடம் புகட்டுவார்கள். இவர்கள் அனைவர் மீதும் இந்து முன்னணியின் வழக்கறிஞர் முன்னணி புகார் அளித்து வழக்கு தொடரும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.