சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1200 பேருக்கு இன்று எனது கையால் பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளேன். ஆண்டுக்கு ரூ.2½ லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கே: அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.தான் எங்களுக்கு போட்டி என அண்ணாமலை கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

ப: இதை நீங்கள் அ.தி.மு.க. தலைவர்களிடம் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் யாரென்றாலும் ஒன்றுதான். பாராளுமன்றத் தேர்தலில் தலைவரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம். எதிர்கொள்வோம். தி.மு.க.வோடு யார் போட்டி என்பதில்தான் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கே: தமிழக கவர்னர், தமிழ்நாட்டில்தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருப்பதாக பேசி இருக்கிறாரே?

ப: அவர் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் போய் பார்க்கிறாரா? என்பது தெரியவில்லை. மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும்போது நமது மாநிலத்தில் குறைவுதான். இங்கு இல்லையென்று சொல்ல மாட்டேன். இருந்தாலும் ஆளுநர் அவரது வேலையை பார்க்காமல் தேவையில்லாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கே: சனாதனம் குறித்து தவறான கருத்துக்களை பரப்பப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் மகனே அதுபோன்று பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளாரே?

ப: நான் இதுபற்றி பல முறை சொல்லிவிட்டேன். அதைவிட முக்கியமான விஷயங்கள் எல்லாம் உள்ளன. சி.ஏ.ஜி. அறிக்கை பற்றி பேசுவோம். மணிப்பூர் பற்றி பேசுவோம். சனாதனத்தை பற்றியும் நான் தொடர்ந்து பேசுவேன். பேசிக்கொண்டே இருப்பேன். சனாதனம் பற்றி பெரியார், அம்பேத்கர் எல்லாம் பேசியிருக்கிறார்கள். கலைஞர் மற்றும் எங்கள் கட்சி தலைவர்கள் எல்லாம் பேசி இருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவும் பேசி இருக்கிறார். அதைவிட நான் ஒன்றும் பேசிவிடவில்லை. பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை பற்றி பேசுவோம். அதன் பின்னர் சனாதனம் பற்றி பேசுவோம். ஆசிரியர்கள் போராட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். நிதி நிலையை பொறுத்து முதலமைச்சர் நிச்சயமாக ஆசிரியர்களின் கோரிக்கையை தீர்த்து வைப்பார். பள்ளிக்கூடங்கள் எல்லாம் திறந்துவிட்ட நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news