உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், வடகொரியா சந்தேகத்திற்கு இடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது என ஜப்பான் பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் கியோடோ நிறுவனம், டோக்கியோவில் உள்ள அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, இந்த ஏவுகணை ஜப்பான் மீது பறந்து கொண்டிருந்ததாகக் கூறியது.
இதுதொடர்பாக, ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு தயார் நிலையில் இருப்பது உள்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.