X

சந்தீப் கிஷனின் ‘மைக்கல்’ படத்திற்கு தடை!

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல் படம் தயாராகி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார்.

புதிய படங்களை திரையரங்குகளில் வெளியான பிறகு 4 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி. தளங்களில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க அதிபர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. ஆனால் மைக்கேல் படத்தை 3 வாரத்திலேயே ஓ.டி.டி.யில் வெளியிட்டு விட்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் தியேட்டர்களில் மைக்கேல் படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறும்போது, “மைக்கேல் திரைப்படத்தை 3 வாரத்திலேயே ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதால் மற்ற தயாரிப்பாளர்களும் அதுமாதிரி செய்வார்களோ என்ற அச்சம் வருகிறது. இதுசம்பந்தமாக திரையரங்க அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடத்தி மைக்கேல் படத்தின் தயாரிப்பாளர், பட நிறுவனம், இயக்குனர் ஆகியோருக்கு வருங்காலங்களில் ஒத்துழைப்பு அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்றார்.