’சந்திராயன் 3’ விண்கலம் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது – இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று செலுத்தி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.
சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது என்றும், எல்.வி.எம்.3- எம்4 ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாகவும் கூறினார்.