பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக வந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள் புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருந்தனர்.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும் சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி. வாசு தெரிவித்துள்ளார். இதில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடிப்பாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து ஜோதிகாவிடம் கேட்டபோது சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. அந்த படத்தில் நடிக்கும்படி யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை என்றார். சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சந்திரமுகி-2 படத்தில் சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் சிம்ரன்தான் கதாநாயகியாக நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் பங்கேற்றார். ஆனால் திடீரென்று அவர் கர்ப்பமாகி படத்தில் இருந்து விலகியதால் ஜோதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.