Tamilசினிமா

சந்திரமுகி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்மந்தம் இல்லை – நடிகர் ராகவா லாரன்ஸ்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, சந்திரமுகி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லை. சந்திரமுகி என்ற பெயர் மட்டுமே ஒன்றாக இருக்கும். ஜோதிகா, சந்திரமுகியாக நினைத்துக் கொண்டார். ஆனால், இந்த பாகத்தில் உண்மையான சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. வேட்டையன் கதாபாத்திரத்தில் சிறிய சஸ்பென்ஸ் இருக்கிறது.

ரஜினி சார் நடிப்பை விட அதிகமாக நடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அது வரவும் செய்யாது. அவரது நடிப்பை அடித்துக்கொள்ள முடியாது. ரஜினி சார் ரஜினி சார் தான். மாமன்னன் பட வடிவேலுவுக்கும் சந்திரமுகி வடிவேலுவுக்கும் என்ன வித்தியாசம் என்றால் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேல் அழுதால் நமக்கு அழுகை வரும் சந்திரமுகியில் வடிவேல் அழுதால் நமக்கு சிரிப்பு வரும்” என்று கூறினார்.