தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முறை கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சந்திரசேகரராவை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். எனவே சந்திரசேகரராவுக்கு எதிராக நான் காமரெட்டியில் போட்டியிட வேண்டும் என விரும்புவதில் தவறில்லை. எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் அல்ல என்றாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வியூக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர ராவ் போட்டியிடும் தொகுதியில் முதிராஜ் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் நடிகை விஜயசாந்தியை களமிறக்கவதற்கான கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.