சந்திரசேகர ராவு பா.ஜ.க-வின் பி அணியாக செயல்படுகிறார் – ராகுல் காந்தி தாக்கு

தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானா உடன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. மற்று மூன்று மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவும். ஆனால், தெலுங்கானாவில் ஆட்சி செய்து வரும் சந்திரசேகர ராவ் கட்சியுடன் இரு கட்சிகளும் மோத உள்ளன. பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றாலும் காலூன்ற நினைக்கிறது.

இதனால் தெலுங்கானா வரும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சந்திரசேகர ராவையும், அவர் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி கம்மம் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சந்திரசேகர ராவ் பா.ஜனதாவின் ‘பி’ கட்சியாக செயல்பட்டு வருகிறார். அந்த கட்சியை பா.ஜனதா ரெஷ்தேதார் (உறவு) சமிதி என்று அழைக்கலாம். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. சந்திரசேகர ராவ் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. அவர் இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் காங்கிரஸ் இருக்காது என்பதை எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வலியுறுத்துகிறேன்.

சந்திரசேகர ராவ் மோடியிடம் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார். சந்திரசேகர ராவ் தன்னை மன்னராகவும், தெலுங்கானா அவருடை ராஜ்ஜியம் என்றும் நினைக்கிறார். கர்நாடகாவில் ஊழல், மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிராக போராடி ஏழை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களால் பா.ஜனதாவை தோற்கடித்தோம். அதபோல் நிலை தெலுங்கானாவில் நடக்கப்போகிறது.

ஒரு பக்கம் அரசின் பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் இருப்பார்கள். இன்னொரு பக்கம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் எங்களுடன் இருப்பார்கள். கர்நாடகாவில் என்ன நடந்ததோ அப்படியே தெலுங்கானாவில் நடக்கும். தெலுங்கானாவில் பா.ஜனதா இல்லை. அவர்களுடைய நான்கு டயர்களும் பஞ்சராகிவிட்டன. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும்- பா.ஜனதாவின் ‘பி’ அணிக்கும் இடையில்தான் போட்டி.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news