கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் வெளியேறி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் வெளியேறி பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிலையில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து வெளியேறிய பெரும்பாலான தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் வாய்ப்பு அளித்துள்ளன. மொத்தம் 17 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதில் பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் தலைவர் எட்டாலா ராஜேந்தரும் அடங்குவார்.
2021-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியில் இவர் இணைந்தார். இதனால் பிஆர்எஸ் இவரை கட்சியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் மல்காஜ்கிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தவிர பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து வெளியேறி கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில் பலர் பா. ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளனர்.
ஜகீராபாத் பி.ஆர்.எஸ். எம்.பி. கட்சியிலிருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இணைந்த சில மணி நேரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஆர்.எஸ். எம்.பி. ராமுலு மகன் பாரத் நகர்குர்னூல் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமுலு தனது மகனுடன் கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாகட்சியில் இணைந்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில்தான் அரூரி ரமேஷ் வாரங்கல் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதே அடிப்படையில்தான் காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் தலைவர்களை வரவேற்று உள்ளது. செவால்லா எம்.பி. ரஞ்சித் ரெட்டி பிஆர்எஸ் சார்பில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிஆர்எஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தனம் நாகேந்தர் எம்எல்ஏ தற்போது செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் பிஆர்எஸ் மந்திரி பட்னம் மகேந்தர் ரெட்டியின் மனைவி சுனிதா மகேந்தர் ரெட்டி விகார்பத் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் மல்காஜ்கிரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிஆர்எஸ் கட்சி வாரங்கல் தொகுதியில் கடியம் காவியாவிற்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் அவர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்று அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தந்தை கடியம் ஸ்ரீஹரி பிஆர்எஸ் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேக ராவின் கட்சி முதலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தெலுங்கானா மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு முறை முதல்வராக இருந்தார். தேசிய அளவிலான தலைவர் என்ற பார்வை ஏற்படுத்த விரும்பிய அவர், தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றினார். இந்த முயற்சி அவருக்கு கை கொடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அவரை படுதோல்வி ஆக்க செய்தது.
மேலும் ஊழல் குற்றச்சாட்டு அவரது மகள் கே கவிதா டெல்லி மாநில மதுபான கொள்கை வழக்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ஆகியவை பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.