சந்திரசேகரராவ் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு இல்லை – திமுக அறிவிப்பு
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இல்லாத 3-வது அணி அமைக்க தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் வியூகம் வகுத்து வருகிறார்.
இதற்காக அவர் ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து பேசுகிறார். வருகிற 13-ந்தேதி சென்னை வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச நேரம் கேட்டிருந்தார். ஆனால் இதுவரை மு.க.ஸ்டாலின் அவருக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கவில்லை.
இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:-
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின்தான் முதன் முதலில் குரல் கொடுத்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் 3-வது அணி உருவாக்க தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் எடுத்து வரும் முயற்சிக்கு எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? அதனால்தான் அவருக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்படவில்லை.
13-ந்தேதி மு.க. ஸ்டாலின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறார். 9-ந்தேதி சென்னை வரும் போது மு.க.ஸ்டாலின் அது தொடர்பாக விளக்கம் கொடுப்பார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.